'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது. தொடர்ச்சியாக, தமிழக மக்களுக்கு தி.மு.க துரோகங்கள் செய்து வருகிறது. என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி பா.ஜ.க மேற்கு மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமையில், ஓசூரில் நடைபெற்ற, பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின், ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது, மழையையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் பெரும் திரளாகப் பங்கேற்றனர்.
அப்போது, பேசிய அண்ணாமலை, 'கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மோடி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர்களுக்கும், தமிழக மகளிருக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏராளமான நலத் திட்டங்களைச் செய்துள்ளார்.
அது மட்டுமின்றி, நமது பிரதமர் அவர்கள், உலகம் முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு சென்று பெருமைப்படுத்தி வருகிறார்.
தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் பல துரோகங்களை இழைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது. தொடர்ச்சியாக, தமிழக மக்களுக்கு தி.மு.க துரோகங்கள் செய்து வருகிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடியின் சரித்திர ஆட்சி தொடர, தமிழகத்தின் பங்கும் இருக்க வேண்டிய அவசியத்தை தமிழக மக்கள் உணர்ந்து ஆதரவு தரவேண்டும்' என்றார்.
இந்த கூட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், மாநிலச் செயலாளர் வெங்கடேசன், விவசாயிகள் அணி மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தன் ரெட்டி மற்றும், மாநில, மாவட்ட, மண்டலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.