தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை ’திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல திமுக பிரமுகர்களின் சொத்து விவரங்கள் குறித்து இருந்தது. இதனை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வருக்கு எதிராக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அதில் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ், உரிய தண்டனை வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனுவானது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்பு, இந்த மனு எட்டு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.
ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். திமுக சார்பிலும், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை, திமுக சார்பிலும் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.