தென்காசி தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த சிவ பத்மநாதன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்ட தி.மு.க-வை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க-வுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க எம்.எல்.ஏ., ராஜா மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து தி.மு.க மகளிரணி சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாவட்ட பெண்ச் சேர்மன் தமிழ்செல்வியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வி, ‘‘மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம், அதற்கும், இங்கு நடப்பதற்கும் என்ன வித்தியாசம்?’’என்று கோபத்துடன் மாவட்ட பெண் சேர்மன் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆதரவாளர்கள்,‘‘மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?’’என்று மிரட்டியதோடு சேலையை பிடித்து இழுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
மாவட்ட பெண் சேர்மன் கையில் வைத்திருந்த மைக் பிடுங்கப்பட்டு அவர் பின் வரிசைக்கு தள்ளப்பட்டது அல்லாமல் சிவபத்மநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவலரை வைத்து மாவட்ட பெண் சேர்மனை மேடையை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளனர். இதுதொடர்பான புகார் தி.மு.க தலைமைக்கும் சென்றது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக மாவட்ட செயலாளராக பணியாற்றி சிவபத்மநாதன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சுரண்டை நகர செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயபாலன் என்பவரை திமுக தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தென்காசியில் நடைபெற்ற மகளிரணி ஆர்ப்பாட்டத்தின்போது, பெண் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தென்காசி மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.