‘உங்க லிப் நல்லாயிருக்கு’ - தி.மு.க மா.செ பதவிப் பறிப்பின் அதிர்ச்சி பின்னணி

எம்.எல்.ஏ-ராஜாவுடனும், மாஜி வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லத்துரையுடனும் என்னை இணைத்து அசிங்கமாக மெசேஜ் போட்டார். பலருக்கும் அதை அனுப்பியிருக்கிறார்.
‘உங்க லிப் நல்லாயிருக்கு’ - தி.மு.க மா.செ பதவிப் பறிப்பின் அதிர்ச்சி பின்னணி

தென்காசி மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவ பத்மநானின் பொறுப்பை பறித்து அதிரடி காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவரது ஆதரவாளர்கள் மாவட்டப் பஞ்சாயத்து பெண் தலைவிக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்தான் இதற்கு காரணம்.

கடந்த 24ம் தேதி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாபன் கலந்துகொண்டு ‘இது பெண்களுக்கான பிரச்னை. ஆண்கள் பேச வேண்டாம். பெண்களே பேசட்டும்’ என சொல்லி வர்த்தக அணி செயலாளர் முத்துச்செல்வியிடம் மைக்கை கொடுத்தார்.

இதனால் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி டென்ஷனாகி முத்துச் செல்வியிடம் இருந்து மைக்கை பறித்தார்.

பின்னர் ஓப்பன் மைக்கில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனை ஒரு பிடிபிடித்தார். ‘மணிப்பூர் சம்பவம் பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அந்தச் சம்பவம் போன்று தென்காசி தி.மு.க-விலும் நடக்கிறது’ என்ற அவரது அரை நிமிடப் பேச்சு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன் பதவியை பறித்துவிட்டது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வியிடம் பேசினோம். ‘ஏற்கெனவே கீழப்பாவூர் செயலாளர் ஜெகதீஸ் எனக்கு, ‘உங்க லிப் நல்லாயிருக்கு’ என்று ஆபாச மெசேஜ் போட்டார். என் கணவர் போஸ் அவரை சத்தம் போட்டார்.

இப்போது மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன் கூடவே இருக்கும் அய்யம்பெருமாள், ‘எம்.எல்.ஏ- ராஜாவுடனும், மாஜி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரையுடனும் என்னை இணைத்து அசிங்கமாக மெசேஜ் போட்டார். பலருக்கும் அதை அனுப்பியிருக்கிறார்.

அரசியலுக்கு ஒரு பெண் வந்தால் இப்படி அசிங்கப்படுத்தலாமா? இந்த ஆபாச மெசேஜ் பற்றி மாவட்ட பொறுப்பாளரிடம் சொன்னேன். அவர் நடவடிக்கை எடுக்கணுமா இல்லையா? மாறாக அதை அவரும் ரசிக்கிறார்.

அப்போ நீயே மெசேஜ் போடச்சொல்லிட்டு நீயே ரசிப்பே, அப்படித்தானே. எனவே அதை என் கணவருக்கு ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து அனுப்பினேன். உடனே அவர் சிவபத்மநாபனுக்கு போன் பண்ணினார்.

10 நிமிடத்தில் பேசுறேன்னு சொல்லிட்டு வைத்துவிட்டார். பத்து நிமிடமாகியும் பேசல. உடனே அய்யம்பெருமாளுக்கு போன் போட்டார். அவரும் எடுக்கலை. அடுத்து எனது கணவர், ‘உன் பொண்டாட்டி அரசியலில் இருந்தால் இப்படி மெசேஜ் போடுவியா?’ ன்னு இருவருக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்.

உன் கூட இருக்கிறவன் ஆபாசமா மெசேஜ் போடுறான். புகார் சொன்னேன். உடனே அவனை கண்டிக்கிறேன்னு ஒரு வார்த்தை என்னிடம் மாவட்ட பொறுப்பாளர் சொல்லியிருந்தால் கூட ஒரு பெண்ணாக அவர்களை மன்னித்து இருப்பேன்.

சிவபத்மநாபனுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய மனிதாபிமானமற்ற செயலை கண்டித்துதானே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

அரசியலுக்கு வருகிற பெண்ணை கொச்சைப்படுத்தும் இவர்களுக்கு அருகதை இல்லைதானே. ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம் என்று சொன்னதுமே, என் பிரச்னையை பற்றி பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதனால் எனக்கு என்ன ஆனாலும் சரி, சும்மா விடக்கூடாது என எண்ணித்தான் மேடையில் அப்படி பேசினேன்’’ என்றார்.

ஆர்ப்பாட்ட மேடையில் தமிழ்செல்வி பேசிய அரை நிமிடப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலானது. முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் இது சென்றது. அவர் உடனடியாக மாநில மகளிர் அணிச்செயலாளர் ஹெலன் டேவிட்சன், பொறுப்பு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை தொடர்பு கொண்டு விசாரிக்க சொல்லியிருக்கிறார்.

அவர்கள் விசாரணையில், ‘எம்.எல்.ஏ ராஜாவுடன் ஒரே அறையில் தங்கியதை சொல்லவா? 50 ரூபாய்தானே உன் ரேட்’ என்றெல்லாம் தமிழ்செல்வியை கொச்சைப்படுத்தி அவருக்கு மெசேஜ் போட்டதோடு, சமூக ஊடகங்களில் வைரலாக்கியிருப்பது தெரிய வந்தது.

உடனடியாக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபனை நீக்க உத்தரவிட்டிருக்கிறார். புதிய பொறுப்பாளராக சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பேச வக்கீல் சிவபத்மநாபனை தொடர்பு கொண்டோம், அவர் போனை எடுக்கவில்லை.

-அ.துரைசாமி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com