சந்தானத்தின் படம் ஹிட் ஆவதை போல் மிக மிக அரிதானது கோவை மாநகராட்சியின் கவுன்சில் கூட்டம் கூடுவதும். காடு போல் குவிந்திருக்கும் குப்பை முதல் காட்டு யானை அட்டாக் வரையில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் மக்களை வாட்டி வதைக்கின்றன.
சொல்லப்போனால் வாரம் இருமுறை கவுன்சில் கூட பல விஷயங்களை முடிவு பண்ணி, அதிரடி ஆக்ஷனில் இறங்கவேண்டிய அளவுக்கு தேவை இருக்கிறது.
ஆனால், இவர்களோ மாதம் ஒரு முறை கவுன்சில் கூட்டுவதற்கே ரூம் போட்டு யோசித்துதான் முடிவெடுக்கிறார்கள். அப்புறம் போனால் போகிறதென்று கவுன்சிலையும் கூட்டுகிறார்கள் என்று கோவையில் அரசியல் விமர்சகர்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
அந்த வகையில், கோவை மாநகராட்சி கூட்டம் கூடியது. வழக்கமாக எதிர்க்கட்சிகள்தான் எல்லா மாநகராட்சியிலும் பஞ்சாயத்து பண்ணும்.
ஆனால், கோவையில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே ஆட்டமாய் ஆடுவார்கள் நிர்வாகத்தின் குறைபாடுகளை கண்டித்து, அந்த வகையில் இந்த முறையும் விட்டு விளாசிவிட்டார்கள்.
’நாங்களும் இருக்கோம்ல’ என்று அ.தி.மு.க கவுன்சிலர்களும் கொஞ்சம் சவுண்டு விடுவது வழக்கம். அந்த வகையில் ‘திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை தனியார் மேற்கொள்வதற்கு எதற்கு முன் அனுமதி தந்தீர்கள் மேயரே? இந்த விவகாரம் சார்ந்து சிறப்புக் கூட்டம் நடத்துமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் நடத்தவில்லை. கவுன்சிலர்கள் நாங்க இங்கே எதுக்கு வந்து போறோம்?” என்றார்கள்.
அதற்கு மேயர் கல்பனாவோ “அரசு சொன்னதால்தான் செய்தேன். இதில் உள்நோக்கம் எதுவுமில்லைங்க. பத்து வருஷமா நீங்கதான் ஊழல் பண்ணுனீங்க” என்று தாக்கினார். இதன் பின் அ.தி.மு.க கவுன்சிலர்கள் புகார் பதாகையை கையில் ஏந்தியபடி மீடியாவுக்கு போஸ் கொடுத்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
தி.மு.க கவுன்சிலரும், நிதிகள் குழு தலைவருமான முபசீரா “கடந்த 6 மாசங்களாக கூட்டம் நடத்தியும், உதவி செயற்பொறியாளர்கள் வர்றதேயில்லை.
டெண்டர் தொடர்பான கோப்புகள் தாமதமாகதான் எங்கள் பார்வைக்கு வருது. சில தீர்மானங்கள் நேரடியாவே மன்றத்துக்கு வருது. அப்படின்னா எங்களோட பணிதான் என்ன?” என்றார்.
உடனே கமிஷனர் பிரதாப் “மார்க்கெட் பெயர் மாற்றம் தொடர்பான கோப்புகளை நிதிக்குழுவுக்கு அனுப்பி மூணு மாதங்களாகுது. இதுவரைக்கும் எந்த ரிப்ளையுமில்லை. தாமதம் பண்றது நீங்கதான்.
கவுன்சிலர்கள் வந்தாலுமே கூட திடீரென கூட்டங்களை தள்ளிப்போடுறீங்க. குழு சார்ந்த அதிகாரிகள் வந்தாலே போதுமானது. அதிகாரிகள் மீது எந்த தவறுமில்லை” என்றார் பொளேரென.
இதன் பின் பேசிய மேயர் “மாதாமாதம் இனி கூட்டங்கள் நடத்தப்படணும். இரண்டு மாசத்துக்கு ஒரு முறை எல்லாம் கூட்டம் நடத்தக்கூடாது” என்றார்.
- ஷக்தி