'தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அராஜகம் அதிகரித்துள்ளது' - பட்டியல் வெளியிட்ட இந்து முன்னணி

போதையால் தான் பெருமளவு விபத்துக்களும் குற்றங்களும் நடக்கின்றன
காடேஸ்வரா சுப்பிரமணியம்
காடேஸ்வரா சுப்பிரமணியம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அராஜகம் அதிகரித்துள்ளது என நடைபெற்ற சம்பவங்களை வரிசையாகத் தொகுத்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது, அதுமட்டுமல்ல தமிழகம் கொலை மாநிலமாகவும், போதையில் மூழ்கும் மாநிலமாகவும் மாறியுள்ளது. இதற்கு உதாரணமாக சில செய்திகளையும் தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

சமீபத்தில் ஜீ ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை நடந்தபோது செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தொலைக்காட்சி நிருபர், விடியோ கலைஞர்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் ஏப்ரல் 25அன்று கொடூரமாகக் கொல்லப்பட்டார். சென்னையில் திட்டமிட்ட ரீதியில் பத்திரிக்கையாளர்கள் தி.மு.க நிர்வாகிகளால் தாக்கப்பட்டதோடு, தொடர்ந்து பல பத்திரிகையாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் ஓமலூர் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலைவெறியோடு துரத்திய கும்பலிடம் இருந்து தப்பிக்கக் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து உயிர் தப்பினார். கோவை துடியலூரில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த கல்லூரி மாணவர் முகம்மது ஷானீத் கைது செய்யப்பட்டார். கல்லூரிகளில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதற்கு இது அத்தாட்சி.

போதை பொருட்களால் குடும்பமே பாதிக்கப்பட்ட ஈரோடு ஓடைப்பள்ளம் பெண் ஆட்டோ ஓட்டுனர் கீதா கலெக்டர் அலுவலகம் முன்பு போதை பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கத் தனிநபர் சத்தியாகிரகம் செய்துள்ளார். ஶ்ரீபெரும்புதூரில் கடந்த 8 மாதத்தில் 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தண்ணீர் திருட்டு பற்றி பேசினால் கொலை செய்யப்படுவேன் என தி.மு.க-வின் கூட்டணி கட்சியான தூத்துக்குடி மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் சந்திரபோஸ் மாநகராட்சி கூட்டத்தில் பேசியுள்ளார்.

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாநாட்டிற்கு அக்கட்சியினர் மிரட்டி பணம் கேட்டு வியாபாரிகளிடம் வன்முறையில் இறங்கியுள்ளனர். திராவிட விடுதலைக் கழகத்தினர் பா.ஜ.க-வின் மாவட்ட பொறுப்பாளரிடம் ரவுடித்தனம் செய்த விடியோ வெளிவந்துள்ளது. வடமாநிலத்தவர்களை அச்சுறுத்தி பணம் பிடுங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் திருநெல்வேலியில் லாரிலாரியாக மணல் திருட்டு நடக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. கஞ்சா முதலான போதை பொருட்கள் நடமாட்டம் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

இதனிடையே தமிழக அரசு மதுபான விற்பனையை அதிகப்படுத்த, திருமண மண்டபங்களில், விளையாட்டு அரங்குகளில் தற்காலிக மதுபான பார் நடத்திக் கொள்ள அரசாணை வெளியிட்டது. திருமணம் என்பது புனிதமானதாக திருவள்ளுவர் உயர்த்தி கூறுகிறார்‌. அவ்விழாவில் வள்ளுவர் பழித்துக் கூறும் மது விருந்து நடத்த அரசு அனுமதியளித்தது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் அதனை வாபஸ் பெறுவதாகத் தற்போது அறிவித்து உள்ளது.

விளையாட்டு என்பது இளைஞர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊக்கப்படுத்த நடைபெறுகிறது. மேல் நாட்டினரை பார்த்து மதுவை வெள்ளமெனப் பாய்ச்சுவது இளைஞர்களைச் சீரழிக்கும். இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பில் இருந்து மக்கள் மீண்ட நிலையில், மதுபானங்கள் தானியங்கி கருவிகள் மூலம் மால்களில் விற்பதற்கு அரசு நிறுவியுள்ளது. மது, கஞ்சா போதையில் மக்களைச் சீரழிக்கத் தமிழக அரசு இத்தனை விரைவாகச் செயல்படுவது வேதனையானது. போதையால் தான் பெருமளவு விபத்துக்களும் குற்றங்களும் நடக்கின்றன.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர்தான் அடாவடித்தனம் அதிகரித்துள்ளது. தொடரும் குற்றங்களைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட்டுச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனுமதிக்க வேண்டும்.

போதை எந்த வகையிலும் நன்மை பயக்காது என்பதைத் தமிழக அரசு உணர வேண்டும். மதுக் கொள்கையை விரிவுபடுத்தி மக்கள் நிம்மதியை கெடுக்க வேண்டாம். பத்திரிகையாளர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை அச்சுறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com