கர்நாடக அமைச்சரவை விழாவில் அவமரியாதை - 'என்ன நடந்தது?' திருமாவளவன் விளக்கம்

மே 28-ம் தேதி சாவர்க்கரின் பிறந்த நாள். அப்படிபட்ட நபர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விளக்கம்
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

'கர்நாடக அமைச்சரவை விழாவின்போது அவமரியாதை நடைபெறவில்லை' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், 'நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர்தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதைதான் உறுதிப்படுத்துகிறது.

புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில், அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இதனை வி.சி.க கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின்போது, அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது திறப்பு விழாவிற்கும் குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை.

அதுமட்டுமில்லாமல், மே 28-ம் தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாள். சனாதான தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அப்படிபட்டவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம்' என்றவர்,

'கர்நாடக தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும். மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டார்கள். அவர்களது முயற்சி பலிக்கவில்லை.

கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் எங்களுக்கு எந்த அவமரியாதையும் நடக்கவில்லை. முறைப்படி தான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாகரத்தில் யாரோ திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்' என்று விளக்கம் கொடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com