தி.மு.க மாவட்ட செயலாளர் நீக்கம் - மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி - என்ன காரணம்?
திருல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், 'தி.மு.க. திருல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், அந்த பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக, நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக மைதீன்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மதுரை மாவட்டத்தை சேர்ந்த மிசா பாண்டியன் தி.மு.கவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார்' என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிவாலயத்தில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'தி.மு.க திருல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் மீது தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக தி.மு.க தலைமை அவருக்கு ஏற்கனவே, எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனாலும், அதை அவர் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க-வில் பலம் வாய்ந்த பதவி என்றால் அது மாவட்டச் செயலாளர் பதவி மட்டுமே. இந்த நிலையில், திருல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அப்துல் வஹாப் நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மதுரை மாநகராட்சி விவகாரத்தில், மிசா பாண்டியன் பெயர் பலமாக அடிப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் அளித்த விளக்கம் திருப்தி இல்லை என்பதால், அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தி.மு,க தலைமைக்கு தர்மசங்கடம் கொடுக்கும் நபர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.