மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையிம் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வும், திமுக எம்.பி, டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி ராஜா அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டார்.
கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கருக்கு போக்குவரத்து துறை கொடுக்கப்பட்டது. அதோடு உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மு.க ஸ்டாலின் தலையிலான திமுக அரசு பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டு தொடங்கிய நிலையில் பால்வளத்துறை அமைச்சரான ஆவடி நாசரை நீக்கம் செய்தும், மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா- வை புதிய அமைச்சராக சேர்த்தும் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவையில் டெல்டா பகுதி எம்.எல்.ஏக்கள் இடம்பெறாமல் இருந்து வந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் டி.ஆர்.பி. ராஜா இன்று (மே 11) காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றப்பிறகு அவருக்கான இலாகா தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
யார் இந்த டி.ஆர்.பி.ராஜா?
டி.ஆர்.பி.ராஜா 1976 ஜூலை 12ந்தேதி பிறந்தவர். சென்னை சேத்துபட்டில் உள்ள எம்.சி.சி படித்து முடித்து சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார். பின் சென்னை பல்கலைகழகத்தில் உளவியல் படித்து முதுகலை பட்டம் பெற்றார். இதையடுத்து வேல்ஸ் பல்கலைகழகத்தில் ’வாக்காளர் மனநிலை’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார். இவரின் தந்தை திமுக எம்.பியான டி.ஆர்.பாலு. இவர் ஆரம்ப காலத்திலிருந்தே திமுக-வில் இருக்கிறார். தன் தந்தை மூலமாக அரசியலில் அறிமுகமான இவர் மன்னார்குடி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக நின்று 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார். அப்போது ஆளுங்கட்சியாக அதிமுக ஆட்சி அமைத்திருந்தது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார். தற்போது ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் நிலையில், தான் எம்.எல்.ஏ. வாக இருக்கும் மன்னார்குடி தொகுதியில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். இவர் மாநில திட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
தொகுதி மக்களுக்கு பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். ராஜாவின் அரசியலும், பணிகளும் தொகுதி மக்களை கவர்ந்திருக்கின்றன. கட்சியிலும் தன் செல்வாக்கை உயர்த்திக் கொண்டுள்ளார். உதயநிதியுடன் நெருக்கமான இவர் திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் அணியின் செயலாளராக இருந்த நிலையில், ஐடி.விங் -ன் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அமைச்சராக பதவியேற்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு, எந்த துறை ஒதுக்கீடு செய்யப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.