டெல்லி இரட்டை இன்ஜின் தடம் புரண்டது என மத்திய பா.ஜ.க அரசு மீது, முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கும், மத்தியில் உள்ள பா.ஜ.க அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், "சட்டமன்ற அதிகாரத்துக்கு வெளியே உள்ள சில அம்சங்களில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும்.
ஜனநாயகத்தில், அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரம், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் தான் இருக்க வேண்டும். டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட, டெல்லி முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "மகாராஷ்டிரா ஆளுநர் செய்தது தவறு. டில்லி துணை ஆளுநர் செய்தது தவறு.
மகாராஷ்டிரா சபாநாயகர் செய்தது தவறு. புதிய கொறடாவை அங்கீகரித்தது தவறு. கட்சி தாவிய சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதியிழப்பு மனுவில் சபாநாயகர் விரைவில் முடிவு எடுக்காதது தவறு.
தவறு செய்தவர்கள் வெறும் பொம்மைகள் என்ற சந்தேகம் எழுவதால் பொம்மலாட்டுக்காரர் யார் என்ற கேள்வி எழுகிறது.
பொம்மலாட்டுக்காரர் பேச மாட்டார்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கருத்துச் சொல்ல மாட்டார்கள். இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.