வரும் 28-ம் தேதி அன்று, டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
டெல்லியில் உள்ள தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் கடந்த 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டிடத்தில், மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவை 250 உறுப்பினர்களும் அமரும் வகையில் வடிவமைகப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த கட்டிடத்தில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவைக்கேற்ப இடப்பற்றாக்குறை உள்ளதாகவும், இரு அவைகளிலும், உறுப்பினர்கள் அமர்வதற்கு போதிய வசதிகள் இல்லாததால், உறுப்பினர்களின் பணித்திறன் பாதிக்கப்பட்டுவதாகவும் தகவல் வெளியானது.
இதனையடுத்து, நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி, நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது.
எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 1,280 எம்.பி.க்கள் அமரும் வகையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து, வரும் 28-ம் தேதி, புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.