தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது என்றும், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ளது போல், இந்தியா முழுவதும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், பல்வேறு காரணங்களால் வேறு மதத்துக்கு மாறும் மக்களைக் கட்டாயப் படுத்தி மதம் மாற்றம் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், 'இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும்' என்று பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், 'தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுதாரர் கூறுவது பொய்யான தகவல். மாணவி லாவண்யாவின் உயிரிழப்பு என்பது தனிப்பட்ட நிகழ்வு. அதனை மதமாற்றம் என்று கூறமுடியாது. இந்தக் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டது' என தெரிவித்துள்ளது.