'என் மீதான ஊழலை நிரூபித்தால் பொது வெளியில் தூக்கில் போடுங்கள்' என மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுள்ளார்.
தலைநகர் டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய அரசியல் புள்ளிகளுக்குச் சம்மன் அனுப்பிய சி.பி.ஐ., தொடர் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் 80 கிளினிக்குளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அனைத்தையும் எனக்கு எதிராக ஒரே நேரத்தில் திருப்பிவிட்டுள்ளனர். எப்படியாவது என்னைத் திருடன் என நிரூபிக்கப் போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் இல்லை. கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு பைசா ஊழலை நீங்கள் நிரூபித்தால், என்னைப் பொதுவெளியில் தூக்கில் போடுங்கள்' என்றார்.