மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பதாக திமுகவுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூன்று பக்க கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 ஆம் தேதி தென்காசி ஆட்சியர் வெளிப்படையாகவே மகளிரின் இலவச பயணத்தால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், தமிழகத்தில் பெரும்பான்மையான கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு புதிய பேருந்து கூட வாங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒட்டுநர்களும் நடத்துநர்களும் குறைவாகவே உள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது பேருந்து சேவையை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
போக்குவரத்து துறை என்பது சேவை துறை. இதில் தமிழக மக்களுக்கு எதிராகவும் மறைமுகமாவும் செயல்பட்டால் அதை அதிமுக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. உடனடியாக நகர பேருந்துகளை அதிகரித்து மகளிர் இலவச பயணங்கள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.