மத்தியில் இருந்து பா.ஜ.க அரசை அப்புறப்படுத்தாவிட்டால், வெறுப்பு அரசியல் தலைதூக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., கலந்து கொண்டார். அப்போது, ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர், திருமாவளவன் எம்.பி., பேசுகையில், 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும், தேர்தல் கணக்கு போட்டு செயல்படும் கட்சி அல்ல. மக்களுக்காக போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கம். அதனால்தான் சொன்னேன், எடப்பாடி பழனிசாமி மதுவிலக்கை எதிர்த்து போராட தயாரானால் நாங்களும் போராடுவோம் என்று. எனது கேள்விக்கு அதிமுகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதே அ.தி.மு.க. கூட்டணியில் பயணப்பட்டவன் நான். இது ஒரு மாறுபட்ட அணுகுமுறை. இந்த ஒரு துணிச்சலான பயணம்.
ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்க பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. சிங்களத்திலும் இதே நிலைதான் நடைபெற்றது.
இலங்கையில் வெறுப்பு அரசியல். இங்கேயும் வெறுப்பு அரசியல். அதனால் தான், ஆளுநர் சனாதனத்தை பாதுகாக்கும் விதமாக பேசியும், நடந்தும் வருகிறார்.
அங்கு சிங்களம், பவுத்த பேரினவாதம். இங்கு இந்து, இந்தி பேரிணவாதம். இதை இப்படியே வளரவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்' என்றார்.