சி.எஸ்.ஆர் ஃபண்ட் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ரஷ்ய விண்வெளி ஏவுதளப் பயண பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கொரோனா கால கட்டத்தில் "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி நடைபெற்றது. இதில், பங்கு கொண்ட மாணவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல உள்ளனர். இந்தியாவுக்கு ரஷ்யா அதிக உதவி செய்து வருகிறது. அதில், இந்த திட்டமும் அடங்கும்.
"மணற்கேணி" திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் அறிமுகம் செய்து வைத்தார். அதில், 7,000 வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது. இது, மாணவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் வகையில், வரும் நாட்களில் ராக்கெட் சயின்ஸ் போன்ற வீடியோக்களும் அதில் இணைக்கப்படும்.
குறிப்பாக, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ் போன்றவற்றை கற்றுக் கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஆர் பண்ட் மூலம் நமக்கு ரூ.100 கோடி கிடைத்துள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில், சி.எஸ்.ஆர் ஃபண்ட் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. மத்திய அரசின் நிதி திட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு முறையாக, சிறப்பாக பயன்படுத்தி வருகிறது' என்றார்.