108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமானதுமாக திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் திகழ்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினசரி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம்.
அந்தவகையில் வைணவ ஸ்தலங்களின் முதன்மையான திருச்சி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது.
தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாகக் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அந்த கோபுரம் 'வெள்ளை கோபுரம்' என்றும் அதற்கு வரலாற்று பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கீழவாசலில் உள்ள நுழைவு வாயில் கோவில் ராஜகோபுரத்தில் இரண்டு நிலைகளில் மேற்கூரை பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அரசு உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால், ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரத்தில் உள்ள நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலை தொடர்கிறது.
இதனை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் சிமெண்ட் மேற்புற பூச்சு உடைந்து கீழே விழாமல் இருப்பதற்காக சவுக்குக் கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுத்துள்ள அவல நிலை நீடிப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரம் மேற்புற பூச்சுகள் மற்றும் மேற்பகுதி இடிந்து விழும் என தெரியாமல் அவ்வழியாக தினசரி அச்சத்துடன் கிழக்கு வாசல் கோபுரத்தை கடந்து செல்கின்றனர் பக்தர்களும், வாகன ஓட்டிகளும்.
கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் அருகே ரெங்கா மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராஜன் நடுநிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் அருகருகில் செயல்பட்டு வருகிறது.
இதனால், கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக தினசரி பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.
வருடத்தின் அனைத்து நாட்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் ரெங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
மாதந்தோறும் உண்டியல்களில் பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டு கோடிக்கணக்கில் பெறப்படும் வருவாயை வேறு பணிகளுக்கு செலவிடும் அறநிலையத்துறை, திருக்கோவிலையும் அதனைச் சார்ந்த இடங்களையும் பராமரிக்க தவறுவது ஏன்? எனத் தெரியவில்லை என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு கிழக்கு வாசல் கோபுரத்தை சீரமைக்க வேண்டும். அங்கு முளைத்துள்ள செடிகளையும் அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள், பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஷானு