அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் அளித்த மாறுபட்ட பரபரப்பான தீர்ப்பு

'’ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை’’
உயர்நீதிமன்றம்- செந்தில் பாலாஜி
உயர்நீதிமன்றம்- செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி பரதசக்கரவர்த்தி மனுவை தள்ளுபடி செய்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என மேகலா தரப்பில் வாதிடப்பட்டது. எதிர்வாதங்களை முன்வைத்த அமலாக்கத்துறை தரப்பு, ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் வாதிட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், ’’நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை தள்ளுபடி செய்யக்கூடிய மனு இது. அவர் ஒரு நிமிடம் கூட கஸ்டடியில் இல்லை. சிகிச்சை நாட்களை நீதிமன்றம் காவல் நாட்களாக கருத முடியாது” என்று நீதிபதி பரதசர்க்கரவர்த்தியும் தீர்ப்பளித்தார்.

இதனால் இந்த மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com