மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பா.ஜ.க சார்பில் வரும் 21-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தனர். விஷச்சாரய மரணத்திற்கு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக, வரும் 20-ம் தேதி கண்டன போராட்டம் நடத்தப்படும் என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கோவையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளச்சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களை தி.மு.க அரசு தடுக்கத் தவறிவிட்டது.
இதனால், திறனற்ற தி.மு.க அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பா.ஜ.க சார்பில் வரும் 20-ம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்த கண்டன போராட்டத்தை பா.ஜ.க மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன்.
மேலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.க சார்பில் வரும் 21-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்' என்றார்.