கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில், பா.ஜ.கவைச் சேர்ந்த கோபால்சாமிக்கு, தி.மு.கவினர் அமோக ஆதரவு அளித்து வாக்களித்ததால், கோபால்சாமி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த தேர்தலில் 100 மாநகராட்சி கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளில் உள்ள 196 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் உள்ள 511 கவுன்சிலர்கள் என மொத்தம் 824 உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வாக்குசாவடியில் வாக்களித்தனர்.
ஊரக உள்ளாட்சியிலிருந்து 5 மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 9 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். அ.தி.மு.க, தி.மு.கவில் தலா 7 , பா.ஜ.கவில் 2 , கொ.ம.தே.க வில் ஒருவர் என மொத்தம் 17 மாவட்ட கவுன்சிலர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர்.
பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கோபால்சாமி 15 ஓட்டுக்கள் பெற்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சியாக அ.தி.மு.க இருந்தாலும், பா.ஜ.க 2 , அதிமுக 7 என மொத்தம் 9 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருக்க முடியும்.
ஆனால் தி.மு.கவில் 5 பேரும், கொ.ம.தே.கவில் ஒருவரும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பா.ஜ.கவை சேர்ந்த கோபால்சாமி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தி.மு.கவும், பா.ஜ.கவும் எதிரும் புதிருமான கட்சியாக இருந்தாலும், தி.மு.கவினர் ஓட்டளித்து, பா.ஜ.கவினர் அமோக வெற்றி பெற்றிருப்பது, தி.மு.கவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க சார்பில் மாவட்ட கவுன்சிலர் ராஜன் மட்டுமே, 9 ஓட்டுகள் பெற்று திட்டப்பணிக்குழு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.கவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், கந்தசாமி, சக்திவேல், பா.ஜ.கவின் ஆதரவோடு, தலா 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
4 வேட்பாளர்கள் 8 ஓட்டுக்கள் பெற்றதால், வெற்றியை அறிவிக்க குலுக்கல் முறையில் 4 வேட்பாளர்களின் பெயர்களும் போடப்பட்டது. இதில் அ.தி.மு.கவைச் சேர்ந்த பிரதீப் பெயர் வந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 5 இடங்களில் 3-ல் அ.தி.மு.கவும், பா.ஜ.க., தி.மு.க தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.க சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற கோபால்சாமி பேசுகையில், 'அ.தி.மு.க கூட்டணி என்பதால், தேர்தலை சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிட்டேன். 15 ஓட்டுகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமல்லாமல், தி.மு.கவினரும், கொங்குநாடு மக்கள் கட்சியினரும், எனக்கு வாக்களித்திருக்கின்றனர். வாக்களித்தவர்களுக்கு மனமார நன்றி' என தெரிவித்தார்.