சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 11-ம் தேதி சோதனை நடத்தியது. கோவை, துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்து கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்டிடியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இம்மாதம் 11ம் தேதி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். காலையிலிருந்து நடைபெற்ற சோதனையில் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
அதே நாளில் சென்னை போயஸ் தோட்ட அலுவலகத்தில் ஏழு பேர் கொண்ட அதிகாரிகள் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். போயஸ் தோட்டத்தில் உள்ள இந்த அலுவலகம் லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் என்பவருக்கு சொந்தமானது. ஆதார் அர்ஜுன் தமிழ்நாடு பேஸ்கட்பால் சங்கத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், அவரது 457 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா தொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. இதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன் மார்டினுக்கு சொந்தமான 173 கோடி ரூபாய் மதிப்பிலான, சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது.