முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை பார்க்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள் கிடையாது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் சம்பத்
அர்ஜூன் சம்பத்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை பார்க்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தைத் தடை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனால் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பலத்த சோதனைக்குப் பிறகே படம் பார்க்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனரை இஸ்லாமிய அமைப்பினர் கிழித்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று திரையரங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தி உள்ளது எனக் கூறியுள்ளார். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா, ’தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை பார்க்க வேண்டும். அவர் மகன் மற்றும் குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களையும், கிரிக்கெட்டும் பார்க்கும் முதலமைச்சர் இதையும் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் எதிராக இவர்கள் குரல் கொடுக்க வேண்டும். காங்கிரஸூம், கம்யூனிஸ்ட்டும் இதில் அரசியல் செய்கின்றன. இஸ்லாமிய மக்களை இவர்கள் ஏமாற்றுக்கின்றனர். மேலும், காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாவலர்கள் கிடையாது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com