வெளிநாடு பயணம் செல்லும் முதல்வர்; இன்று அமைச்சரவை மாற்றமா?

அமைச்சர்களாக உள்ள நாசர், கயல்விழி செல்வராஜ், ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வார கால வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு அமைச்சரவையை மாற்றியமைத்து, சில அமைச்சர்களை நீக்கி, சிலரது இலாகாக்களை மாற்ற உள்ளார். அதற்கான அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகளுடன் மே 23-ம் தேதி தனது வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்குச் சென்று மே 31-ம் தேதி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தமிழக அமைச்சரவையில் மாற்றம் இன்று நடைபெற உள்ளதாகவும் , அமைச்சர்களான நாசர் , கயல்விழி செல்வராஜ், ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

அதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கருக்கு போக்குவரத்து துறை வழங்கப்பட்டது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

இந்நிலையில் மு.க ஸ்டாலின் தலையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முடியும் நிலையில், அமைச்சரவை மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகளை பொறுத்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதோடு சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும், மனோ தங்கராஜீக்கு பால்வளத்துறையும், தியாகராஜனுக்கு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையும் தமிழரசிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறையும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமைச்சர்களாக உள்ள நாசர், கயல்விழி செல்வராஜ், ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது தாராபுரம் தொகுதி எம்எல்ஏவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழிவுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அமைச்சராக இருக்கும் கயல்விழிக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக கயல்விழியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யலாம் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com