தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 23 ஆம் தேதி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு, அதாவது 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு, பெரு நிறுவனங்களை அழைக்கும் வகையில் பல்வேறு முக்கிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிற்துறை உயர் அதிகாரிகள் தொடர் வெளிநாடு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வரும் 23-ம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மே 30-ம் தேதி முதலமைச்சர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்கக்கது.
இது தொடர்பாக தி.மு.க மூத்த அமைச்சர்களிடம் கேட்டபோது, 'முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். ஆனால், முதலமைச்சர் எப்போது வெளிநாடு செல்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.