'சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளிடம் கன்னித்தன்மையை சோதிக்க 'இரட்டை விரல் சோதனை' செய்துள்ள நிகழ்வு கடும் கண்டனத்திற்கு உரியது' என்று தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளிடம் கன்னித்தன்மையை சோதிக்க 'இரட்டை விரல் சோதனை' செய்து கொடுமைக்கு உட்படுத்தியது அரசு என்று ஆளுநர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மனிதத் தன்மையற்ற இந்த குற்றத்தை செய்தவர்களும், செய்ய தூண்டியவர்களும் பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் தண்டிக்கப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பிறப்பு உறுப்பில் காயங்கள் இருக்கிறதா? என்பதை மருத்துவர்கள் கை விரல்களை வைத்து பரிசோதனை செய்வதே, இரட்டை விரல் சோதனையாகும். அந்த காயம்பட்ட இடத்தில் கை விரல் பட்டால் மேலும் வலி அதிகமாகும்.
இந்த இரட்டை விரல் சோதனை என்பது விஞ்ஞான பூர்வமானது அல்ல என்பதோடு, குழந்தைகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.
கடந்த 2013ம் வருடமே இந்த "இரட்டை விரல் சோதனையை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது" என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, "இந்த சோதனை தனிநபர் அந்தரங்கத்தை மீறுவதோடு, உடலளவில் மனதளவில் காயப்படுத்தி அவர்களின் கண்ணியத்திற்கு கேட்டை விளைவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால், குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறி, இந்த கொடுமை நடந்ததற்கு காரணமானவர்களும், துணை நின்றவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.