'தமிழகத்தில் 6 மண்டலங்களில் இளைஞர் அணி நேர்காணல் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள 3 மண்டலங்களுக்கான நேர்காணல் விரைவில் நடத்தி முடிக்கப்பட்டு, மாவட்டப் பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர்' என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகளை நிறைவு செய்து, வருகிற மே 7 -ம் தேதி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த இரண்டு ஆண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை, மக்களிடம் கொண்டு சேர்த்திட, மே 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. எதிரிகள் தினம் ஒரு அவதூறுகளை சமூக வலைதளம் மூலம் பரப்பி வருகின்றனர். இதனால், நமது சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்.
மேலும், இளைஞர் அணி நேர்காணல், அரசு நிகழ்ச்சிகளில் கழகத் தொண்டர்கள் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை இளைஞர் அணி நேர்காணல் 6 மண்டலங்களில் நடந்து முடிந்துவிட்டது. மீதமுள்ள 3 மண்டலங்களுக்கான நேர்காணல் விரைவில் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்டப் பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், சட்டமன்றத்தில் பெற்ற வெற்றியைப்போலவே, மாபெறும் வெற்றி பெறுவோம்' என்றார்.