நிர்வாக காரணங்களுக்காகவே தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 3-ம் ஆண்டில் அடியெடுத்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் குறிப்பிட்ட 5 அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு புறம் வரவேற்பும், மறுபுறம் பேசுபொருளாகவும் ஆகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம், முன்னாள் முதல்வர் கலைஞர், ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார்.
2008-ஆம் ஆண்டு , 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலை துவங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தொழிற்சாலையில் இருந்து ஹூண்டாய் நிறுவனத்தினுடைய ஒரு கோடியாவது காரை நான் அறிமுகம் செய்தேன். இப்படி, இந்த ஹூண்டாய் கார் கம்பெனிக்கும், தமிழகத்திற்கும் நீண்ட தொடர்பு உள்ளது.
தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரும் காலத்தில் தொடரும். நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த காரணமும் இல்லை' என்றார்.