சென்னை: ஆசிரியர்கள் போராட்டம் - அரசாணை 149-ஐ கைவிடமறுப்பது ஏன்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
'ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாணை 149-ஐ கைவிட்டு, நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும்' என்று தமிழக அரசை, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், 2013-ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் பெற்றது. இதில், தமிழ பா.ஜ.க தலைவர் அண்ணமலை கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, 'ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணி நியமனத்திற்காகப் போராட்டம் நடத்தி வரும் ஆசிரிய பெருமக்களுக்கு தமிழக பா.ஜ.க ஆதரவு தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் துயரங்கள் மிகவும் வருத்தத்துக்குரியது. ஆசிரியப் பணியை நோக்கமாகக் கொண்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும், பல ஆண்டுகள் காத்திருந்தும், அதற்கான பலன் கிடைக்காமல், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.
ஆசிரியர் பணி நியமனம் குறித்து போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க தற்போது முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டிருக்கிறது.
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்ற அரசாங்க ஆணை 149-ஐ அமல்படுத்தத் துடிக்கிறது.
2013-ம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசாணை 149-ஐ கைவிட்டு, நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியப் பணி எனும் உன்னதமான பணியில் இருக்கும் சகோதர சகோதரிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும், தொடர்ந்து அவர்களை அலைக்கழிக்க வேண்டாம் என்றும் திறனற்ற தி.மு.க அரசை எச்சரிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.