சென்னை: ‘ஆளுநர் என்ன ஆண்டவரா?’ - பி.கே.சேகர் பாபு காட்டம்
'நியமன பதவியில் வந்த ஆளுநர் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை' என்றும், ‘ஆளுநர் என்ன ஆண்டவரா?’ என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் 50,000 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரப்பு செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். அவை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகுதான் 50,000 ஏக்கரில் 4,000 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 4,225 கோடி ரூபாய் சொத்துகளை மீட்டுள்ளோம்.
இதில், முக்கிய விசயம் என்னவென்றால் 6 இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. எனவே, ஆளுநர் முதலில் நன்றி சொல்ல வேண்டும் என்றால், பா.ஜ.க-வினரிடம் இருந்து நிலங்களை மீட்டுக் கொடுத்த தமிழக அரசுக்குதான் நன்றி சொல்ல வேண்டுமே தவிர குறை சொல்லக்கூடாது.
சிறுமிகள் மீது இரட்டைவிரல் சோதனை எங்கும் நடைபெறவில்லை. சட்ட ஆலோசகர்கள் அறிவுரையின்படி, பெண் மருத்துவர்கள் கொண்டு பாதுகாப்பான முறையில் சோதனை மேற்கொண்டதாக டி.ஜி.பி-யே தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் தவறு செய்தார்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாய கூடாதா? அல்லது சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் ஆளுநர் அவர்களுக்கு என்று தனிசட்டம் நிறைவேற்றி உள்ளாரா? சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டவிதிமீறல், எங்கு நடந்தாலும் அதை தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஆளுநர் என்ன ஆண்டவரா? தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி. எனவே, நியமன பதவியில் வந்த ஆளுநர் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை' என்றார் காட்டமாக.