'அ.தி.மு.க ஆட்சியில்தான் தானியங்கி மது விற்பனை இயந்திரம் அமைக்கப்பட்டது. தி.மு.க ஆட்சி அமைந்த கடந்த 2 வருடத்தில் 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது' என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை திருமங்கலத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, 'டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம், சமத்துவமும் சமூக நீதியையும் என்றும் காத்திடும் திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு இல்லை.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் துவங்கப்பட்ட கடைகளில், 96 கடைகள் எந்த அறிவிப்பும் இன்றி மக்கள் நலன் காக்கும் இந்த மகத்தான ஆட்சியில் மூடப்பட்டுள்ளன. மேலும் 500 கடைகளை மூடுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்டோமேட்டிக் வெண்டிங் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள மால் ஷாப்கள், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திறக்கப்பட்ட கடைகள். அது தெரியாமல் நாங்கள் புதிதாக கொண்டு வந்து பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில், ஏ.டி.எம். மெஷின் மாதிரி பொருத்த போகிறோம் என்ற பொய் செய்தியை மக்களிடத்திலே பரப்பி உள்ளார்கள்.
ஒரு சிலர் ஆராயாமல் வெளியிடும் தகவல்களைக் கொண்டு சில அரசியல் கட்சிகள் மக்கள் நலன் காக்கும் கழக அரசின் மீது காழ்ப்புணச்சியோடு குற்றம் சாட்டுகின்றன' என்றார்.