சென்னை: 'சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை என்பது பொய்யான குற்றச்சாட்டு' - காவல்துறை விளக்கம்

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்

'சிதம்பரம் பகுதியில் சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை என்பது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு' என்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழிவாங்கும் நோக்குடன் சமூக நலத் துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்சிதர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் வைத்ததாகவும், அதன் அடிப்படையில் உறவினர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், 6, 7-ஆவது வகுப்பு மாணவியர் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் இரு விரல் கன்னி பரிசோதனை செய்ததாகவும், இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் ஆகும்.

குழந்தைத் திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில், அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களை திரட்டிய பின்பு சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் குழந்தை திருமண சட்டப் பிரிவுன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றத்தில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைபடி 2 சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் அவர்களை பெண் மருத்துவர்கள் இருவிரல் பரிசோதனை நடத்தினர். ஆனால், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அது போன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை.

4 குழந்தை திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கும் ஆதாரங்கள் இருந்தன என்பதால் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்பது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு ஆகும். அதோடு இதனால், சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பதும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com