தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்று வரும் 7ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடை உள்ளது. இந்தநிலையில், தமிழக சட்டப் பேரவை 5-வது கூட்டத்தொடரின் 2-ம் கூட்டம் கடந்த மார்ச் 20-ம் தொடங்கியது. ஏப்ரல் 21-ம் தேதி நிறைவுபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தின்போது, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தும் நடைமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனிடையே, வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல உள்ளதாகவும், அந்தப் பணயம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது.
குறிப்பாக, தமிழகத்தில் பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.