'இந்திய சுதந்திரப் போரட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுதாரரான வீமராஜா ஏழ்மையுடன் போராடி வருவதால், தியாகிகள் உதவித் தொகை உடனடியாக கிடைக்க உதவி செய்யவேண்டும்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுதாரர் வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை.
இவர், ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இதனால், கடந்த ஒரு வருடமாக பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் படுத்த படுக்கையாக கிடக்கிறார்.
அதன் காரணமாக அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையில் உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர்.
இதுவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் உதவித் தொகை கிடைத்து வந்தது. ஆனால், விபத்தில் சிக்கியதால், நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், மார்ச் மாதம் உதவித் தொகை கூட இன்னும் பெறவில்லை.
எனவே, அவரது இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்குச் சேர வேண்டிய தியாகிகள் உதவித் தொகையை அவரது வீட்டில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து உதவி செய்ய வேண்டும்.
மேலும், அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளும் செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.