'தமிழகத்தில் கள்ளச் சாராயம் காரணமாக 22 உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த, அமைச்சர் செஞ்சி மஸ்தானைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில், 'தமிழகத்தில் கள்ளச்சாராயம் காரணமாக 22 உயிர்கள் பலியாவதற்குக் காரணமாகவும், சாராய வியாபாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருங்கிய தொடர்பிலும் உள்ளார்.
எனவே, அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவி நீக்கம் செய்யும்படி தமிழக முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்று கூறி, தமிழக பா.ஜ.க சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
அதேபோல, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், தன் கடமையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தவறிவிட்டார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று, பண மோசடி செய்த வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும்' என்று மனுவில் தெரிவித்துள்ளார்.