'தி.மு.க ஆட்சியில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக' தமிழக ஆளுநர் ரவியிடம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஊழல், கொலை, கொள்ளை உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
சமீபத்தில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்தால் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக, தி.மு.க ஆட்சி மீது ஆளுநரிடம் புகார் அளிக்கப்படும் என்று அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக இன்று, அ.தி.மு.க சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை கிண்டியில் பேரணி நடைபெற்றது.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பேரணியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக, சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆளுநர் மாளிகைக்குள் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை மட்டும் போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களின் வாகனத்தை அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, தி.மு.க அரசுக்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்தார்.