சென்னையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பார்த்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'கொடூரமான உண்மை வெளிவந்துள்ளது' என கருத்து தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களில் உள்ள பெண்கள் காணாமல் போனதன் பின்னணியை மையமாக வைத்து "தி கேரளா ஸ்டோரி" என்ற திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கதையின் மையக் கருவாக, காணாமல் போகும் 32 ஆயிரம் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும், பின்னர் தடை செய்யப்பட்ட ஐ.எஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ அமைப்பில் சேர்ந்து தீவிரவாதத்தைப் பெண்கள் பரப்புவதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் "டீசர்" கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது.
அப்போது, மதசார்பற்ற இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் மே 5 ம் தேதி 5 மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
"தி கேரளா ஸ்டோரி" திடைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால்,தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்கள் இப்படத்தை திரையிட மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ தியேட்டரில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார்.
இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர் ரவி, 'கொடூரமான உண்மையை வெளிப்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு நன்றி' தெரிவித்தார்.