பிரதமர் நரேந்திர மோடியின், மனதில் குரல் 100 வது நிகழ்ச்சியையொட்டி சென்னையில் பா.ஜ.க சார்பில் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ்மொழி பாடல் ஒலிக்கப்பட்டது. இதனால் பா.ஜ.க-வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரதமரின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை பொது மக்கள் கேட்பதற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னை நடுக்குப்பம் பகுதியில் பா.ஜ.க சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதில் குரல்’ நிகழ்ச்சி நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், பிரதமரின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வருகைக்காகவும் அனைவரும் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவதை பொதுமக்கள் காணும் வகையில் பெரிய அளவிலான ஸ்கிரீன் வைத்திருந்தனர். ஸ்கிரீன் முன்பு ஏராளமான பா.ஜ.க-வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ்மொழி பாடல் ஒலிக்கப்பட்டது. இதைக்கேட்டு அங்கிருந்த பா.ஜ.க-வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பாடலை நிறுத்த வேண்டும் என மூத்த நிர்வாகிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த பாடல் உடனே நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.