சென்னை மாநகராட்சியின் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.கவின் 9 கவுன்சிலர்கள் தேர்வு பெற்றனர். வாக்குறுதி கொடுத்தபடி நடக்காமல் காங்கிரஸ் கட்சியை தி.மு.க கழட்டிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நேற்று 27 -ம் தேதி ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில், தி.மு.கவைச் சேர்ந்த ஏ.சந்திரன் (27-வது வார்டு), க. தேவி கதிரேசன் (39 -வது வார்டு), ராஜேஷ் ஜெயின் (57-வது வார்டு), நா.உஷா (83 -வது வார்டு), ம.கமல் (86-வது வார்டு), ஜெ.புஷ்பலதா (103- வது வார்டு), எம்.ஸ்ரீதரன் (140-வது வார்டு), வ.செல்வக்குமார் (154 -வது வார்டு), அ.முருகேசன் (200-வது வார்டு) ஆகிய 9 கவுன்சிலர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு பெற்றனர்.
இவர்களுக்கு ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அதற்கான சான்றிதழ்களை வழங்கினார். உடன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆனால், இந்த நிகழ்ச்சியை தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது.
காரணம், மொத்தம் உள்ள 9 உறுப்பினர் இடங்களில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என தி.மு.க உறுதி அளித்திருந்தது.
ஆனால், அமைச்சர் சேகர் பாபுவின் தலையீட்டால் அந்த ஒரு இடமும் பறிபோய்விட்டது என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக, தி.மு.க தலைமைக் கழகத்தில் புகார் கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டு தி.மு.க திட்டவட்டமாக மறுத்துள்ளது.