நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்தவே ரூ.2,000 ரூபாய் வாபஸ் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி தி.நகரில் நடைபெற்றது.
கையெழுத்து இயக்கத்தை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், 'போதைப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதோடு மட்டும் அல்லாமல் பொது மக்களிடமும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே த.மா.கா-வின் லட்சியம்.
அதற்காகவே, இந்த கையெழுத்து இயக்ககம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஒரு மாத காலம் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறும்.
நிறைவாக, 10 லட்சத்திற்கும் மேல் கையெழுத்திட்டு அந்தந்த பகுதிகளில் ஆட்சியாளர்களிடம் வழங்கப்படும். அரசின் மெத்தன போக்கே கள்ளச்சராயம் குடித்து 20 பேர் இறந்ததற்கு காரணம்.
பொருளாதாரத்தை உயர்த்தவே ரூ.2,000 ரூபாய் வாபஸ் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஏழைகள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள்' என்றார்.