'விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவகத்திற்கு சென்றபோது, கட்சி அலுவலகத்தில் இருந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தன்னை தாக்கியதாக, சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதில், தன்னையும், தனது மனைவி குழந்தைகளை தாக்கிய அவர்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பறித்துக் கொண்டதாகவும், இந்த தாக்குதலுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன்தான் காரணம் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில், வி.சி.க தலைவர் திருமாவளவன், வீரப்பன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் என்று வேதா அருண் நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், "இந்த வழக்கு முதலில் நந்தம்பாக்கதிலும், பின்னர், வேளச்சேரியிலும் உள்ளதால், ஆவணங்களை கண்டுபிடிக்க கூடுதல் அவகாசம் தேவை " என்று கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, "இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், வழக்கின் விசாரணை நிலை குறித்தும் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.