கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, 'திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது' என தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 138 தொகுதிகளிலும், பா.ஜ.க 62 தொகுதிகளும், ம.ஜ.த 20 தெகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் போதுமானது என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.
கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.
பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி மக்கள் தங்களது கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 'பா.ஜ.க-வை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும்' என தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள்.
சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.