'தமிழகத்தில் அ.தி.மு.க-வின் தோளில் ஏறி பா.ஜ.க சவாரி செய்கிறது. எது எப்படி இருந்தாலும் பா.ஜ.க-வால் ஒரு அங்குலம்கூட முன்னேற முடியாது. பா.ஜ.க-வோடு சேர்வதால் அ.தி.மு.க-வுக்கு தேய்மானம்தானே தவிர, வலிமை பெறாது. எனவே பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேற வேண்டும்' என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெண்களுக்கு 10 மாவட்டச் செயலாளர்கள் பதவி உள்ளிட்ட 110 பதவிகள் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னை, அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில், மகளீர் அணி மாநிலச் செயலாளர் நற்சோனை தலைமையில் மகளிரணி நிர்வாகிகள், வி.சி.க. தலைவர் திருமாவளவனை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 'கர்நாடக மாநிலத்தில் மக்கள் பா.ஜ.க-வை ஓடஓட விரட்டியடித்துள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வை வீழ்த்த மாநில கட்சிகள் காங்கிரஸோடு இணைந்து செயல்படவேண்டும்.
தமிழகத்தில் அ.தி.மு.க-வின் தோளில் ஏறி பா.ஜ.க சவாரி செய்கிறது. எப்படி இருந்தாலும் பா.ஜ.க-வால் ஒரு அங்குலம்கூட முன்னேற முடியாது. பா.ஜ.க என்ற மதவாத கட்சியோடு கூட்டு சேர்ந்தால் அ.தி.மு.க-வுக்கு தேய்மானம் தானே தவிர, வலிமை கிடைக்காது.
பா.ஜ.க கூட்டணி அ.தி.மு.க-வுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். எனவே, பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியே வரவேண்டும்.
முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் ஒரு தளமாக அமையும். தி.மு.க கூட்டணியைப் பலவீனப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுடமாட்டோம்' என்றார்.