தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்று வரும் 7ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடை உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை 5-வது கூட்டத்தொடரின் 2-ம் கூட்டம் கடந்த மார்ச் 20-ம் தொடங்கியது. ஏப்ரல் 21-ம் தேதி நிறைவுபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
குறிப்பாக, தொழில்துறை சார்பில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை (மே-2)நடைபெறுகிறது. இதில், தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோவை வெளிட்டார். இது தொடர்பாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.