தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மே 2021 முதல் மார்ச் 2022 வரை பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் அமைச்சராகப் பணியாற்றினார்.
பின்னர், அமைச்சரவை மார்ச் 2022-ல் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து துறை அமைச்சராகப் பொறுப்பேற்று தற்போது வரை செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனா பரவல் விதிமுறைகளை மீறி, மத்திய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராகவும் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேட்டை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. இதில், சிவசங்கர் கலந்து கொண்டார்.
அதேபோல, மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் மற்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டார். இது தொடர்பாக, சிவசங்கருக்கு எதிராக அரியலூர் காவல் நிலையங்களில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்துச் செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, உள்நோக்கத்துடன் தன்னைத் துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமைச்சர் சிவசங்கருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளையும் ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.