‘ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் விரைவில் மீட்கப்படும்' - அமைச்சர் சேகர் பாபு உறுதி

தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் ராமானுஜர் பிறந்த ஸ்தலம் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்டவற்றை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கு முன்பாக ஸ்ரீ ராமானுஜர் சன்னதி ஆதிகேசவ பெருமாள் தாயார் சன்னதிகளில் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடன் இணைந்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த திருக்கோயிலில் திருப்பணிகள் துவங்க திட்டமிட்டு அதற்கான முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் கடந்த 2021 அ.தி.மு.க ஆட்சியில் கடைசி நாள் எந்தவித முறையான பணிகளும் நடைபெறாத நிலையில் ராமானுஜர் மணி மண்டபம் திறக்கப்பட்டது.

தற்போது அது பயன்பாட்டில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. இதனை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் திருக்கோயில் நிலங்களை மீட்க தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் மட்டுமே இருந்தார். தற்போது 3 பேர் நியமிக்கப்பட்டு தமிழக முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள திருக்கோயில் நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலையில் சிறப்புத் தரிசனம் என்ற பெயரில் கட்டணம் பெற்றது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என அனைவரும் சிறப்பு தரிசனத்தில் சென்று நெருக்கடி ஏற்படுவது நிஜம். அதனை போக்கும் வகையில் விரைவில் சரி செய்யப்படும்" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com