மேயரை மாத்துங்க... துணை மேயரை தூக்குங்க- அமைச்சரை பதற வைக்கும் கோவை தி.மு.க

'முதல்வர் கவனத்துக்கு அமைச்சர் இதையெல்லாம் கொண்டு போகப்போறார். என்ன முடிவு கிடைக்குமோ?'
மேயரை மாத்துங்க... துணை மேயரை தூக்குங்க- அமைச்சரை பதற வைக்கும் கோவை தி.மு.க

கோயமுத்தூர் மாநகராட்சியானது அ.தி.மு.க.வின் கோட்டை எனும் சொல்லாடலை பொய்யாக்கும் விதமாக கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை அமோக வெற்றி பெற வைத்து, மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளையும் கைப்பற்ற வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

ஆனால், அவரிடம் இப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் ‘மேயரை மாத்துங்கண்ணா, துணை மேயரை தூக்குங்கண்ணா, சிட்டிங் மண்டல தலைவர்களை நீக்குங்கண்ணா’என்று ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்திருப்பதால் அமைச்சர் ஷாக்காகி போயுள்ளார்.

ஏன் என்னாச்சு? என்று கோவை மாநகராட்சியை சேர்ந்த சீனியர் தி.மு.க.வினர் சிலரிடம் நாம் கேட்டபோது “கடந்த 2021 சட்டமன்ற தேர்தல்ல தமிழகம் முழுக்க பரவலா எங்க கட்சி ஜெயிச்சாலும் கூட கோவை மாவட்டத்துல வாஷ்-அவுட் ஆனது. அதிலும், கோவை சிட்டியில் மிக மோசமான தோல்வி. இந்த நிலையில அதுக்கு அடுத்த ஆண்டே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்துச்சு. இந்த மாவட்டத்தில் அமைச்சர்கள் இல்லாத காரணத்தால பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி உயிரை கொடுத்து உழைச்சார். அதோட விளைவா முரட்டுத் தனமான வெற்றியை திமுக இங்கே பெற்றிருக்குது.

மேயர், துணைமேயர், மண்டல தலைவர் போன்ற பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு கூட கொடுக்காமல் எங்க கட்சியை சேர்ந்தவங்களுக்கு அதைக் கொடுத்து அங்கீகாரம் தந்திருக்கார். அதிலும் மேயராக மிக சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த கல்பனாவை நியமிச்சிருக்குது தலைமை. துணைமேயர் வெற்றிச்செல்வனும் அப்படித்தான். மண்டல தலைவர்களுக்கும் இந்த பதவி ஜாக்பாட்தான். ஆக, இப்படியான சூழல் இருக்குற நிலையில மேயர் முதல் அத்தனை பேரும் பம்பரமா சுழன்று மக்களுக்காக உழைச்சு கோவையை ஜொலிக்க வைக்கணுமா இல்லையா? அதுதானே வெற்றியை தந்த மக்களுக்கு நாம செய்யுற பதில் மரியாதை.

அதேமாதிரி இந்த சிட்டியில கட்சியை வளர்த்து, மக்களின் நம்பிக்கையை பெற்று வெச்சிருக்கணும். அதுதானே தலைமைக்கு நாம செலுத்துற நன்றிக்கடன். ஆனால், இதை இவங்க செய்றதில்லை. எந்த வளர்ச்சியையும் மக்களின் கண்களில் காட்டாமல் மாநகராட்சியை சீரழிச்சு வெச்சிருக்காங்க. ஒரு ரோடு உருப்படி கிடையாது. தண்ணிப் பிரச்னை, நாய் பிரச்னைன்னு திரும்புன பக்கமெல்லாம் சிக்கல்கள். இன்னும் ஒரு வருஷத்துல நாடாளுமன்ற தேர்தல் வர இருக்குது. அப்ப தைரியமா எந்த வார்டிலும் வாக்கு கேட்டு போக முடியாத சுழலை உருவாக்கி வெச்சிருக்காங்க.

குண்டுங்குழியுமான ரோடுல மக்கள் விழுந்து எழுந்து செத்துட்டிருக்காங்க. ஆனா எங்க கட்சியின் மக்கள் பிரதிநிதிகளோ நகைக்கடை திறப்பு விழாவுக்கு போறது, கட்சி விழாவுல போயி நின்னு குத்தாட்டம் போடுறதுன்னு சர்வ காலமும் ஆட்டம் பாட்டத்துலேயே காலத்தை ஓட்டுறாங்க. இது மட்டுமில்லாமல் திமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கே கூட நல்லது பண்றதில்லை. சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களால் மக்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளவே முடியலை.

அதனாலதான் கடந்த சனிக்கிழமையன்னைக்கு பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி எல்லா கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவங்களை கூப்பிட்டு கருத்து கேட்டார். அப்ப எங்க கட்சியின் கவுன்சிலர்களாக மட்டுமே இருக்கும் நபர்கள் வெடிச்சுட்டாங்க. ‘மாநகராட்சியின் நிர்வாக பதவியில் இருக்கும் யாரும் எந்த மக்கள் பணியும் பண்றதில்லை.

சம்பாதிப்பதை மட்டுமே குறியாக வெச்சுட்டு செயல்படுறாங்க. எல்லா வார்டுகளிலும் நம்ம கட்சி மீதும் அரசும் மீது அதிருப்தி நிலவுது. இதே நிலை தொடர்ந்தால் ஓட்டு கேட்க உள்ளே போக முடியாது. அதனால மேயர், துணை மேயர், மண்டல தலைவர் பதவிகளை சுழற்சி முறையில் கொடுங்க. அப்படி அறிவிச்சால்தான் இவங்களுக்கு பயமும் வரும், ஆட்டமும் அடங்கும்’அப்படின்னு குமுறிட்டாங்க. இந்த கோபத்தை அமைச்சரே எதிர்பார்க்கலை. மாநகராட்சியின் நிர்வாக பதவியில் இருக்கிறவங்களை தனியே அழைச்சு திட்டி தீர்த்துட்டார். முதல்வர் கவனத்துக்கு அமைச்சர் இதையெல்லாம் கொண்டு போகப்போறார். என்ன முடிவு கிடைக்குமோ” என்று நிறுத்தினர்.

நாம் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது “சாதாரண ஆலோசனை கூட்டம் நடத்தினோம் அவ்ளோதான். எந்த அதிருப்தியுமில்லை. சிறப்பா போகுது நிர்வாகம்” என்றார். அப்ப ஏனுங்கண்ணா பல கவுன்சிலர்களுக்கும் கண்ணு வேர்த்திருக்குது?!

- ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com