நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
கடந்த 19ம் தேதி அவர் தென்காசியில் நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துவிட்டு சங்கரன்கோயிலுக்கு புறப்பட்டார். கடையநல்லூர், புளியங்குடி ஆகிய இடங்களில் அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் வீரிறுப்பு, இறுமன்குளம் வழியாய் வடக்குபுதூர் கிராமத்திற்கு வந்தார். அங்கு அவரை வழிமறித்த கிராம மக்கள், ’’அய்யா எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஆனையூர் மலை பக்கம் தனியார் ஒருவர் கல் குவாரி எடுத்திருக்கிறார். அவர் அந்த மலையையே மொட்டை அடித்து விட்டார்.
தற்போது அளவுக்கு அதிகமாக பூமிக்குள் வெடி வைத்து கனிமவளங்களை கடத்துகிறார். இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் அடியோடு வற்றிவிட்டது. இதனால் விவசாயம் பாழாகிப் போய்விட்டது.
இதுகுறித்து கலெக்டரிடம் மூன்று ஆண்டுகளாய் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்று கூறவும் டென்சனான சீமான், சட்டென குவாரிக்கு வண்டியை விடச் சொன்னார்.
ஆனால், அவரது பாதுகாப்பிற்காக வந்திருந்த சங்கரன்கோயில் இன்ஸ்பெக்டர் மாதவன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். புரோட்டாக்காலில் இல்லாத நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
ஆனால், அவர் சொன்னதை சீமான் கேட்காமல் வண்டியை குவாரிக்கு விட்டிருக்கிறார். அங்கு வாட்ச்மேன் அவரை வழிமறித்திருக்கிறார். அனுமதியின்றி யாரையும் உள்ளே விடக்கூடாது என்று முதலாளி கூறியிருப்பதாய்ச் சொல்லி சீமானை மறித்திருக்கிறார்.
டென்சனான தொண்டர்கள் வாட்ச்மேனைப் பிடித்து கையை முறுக்கி அடித்து உதைத்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் மாதவன் அதை தடுத்து நிறுத்தி, மீண்டும் சீமானை அங்கிருந்து போகச் சொல்லவும், சீமான் வேறு வழியின்றி குவாரியை பார்வையிடாமலேயே சங்கரன்கோயில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் அத்துமீறி தனியார் இடத்திற்குள் நுழைந்து காவலாளியைத் தாக்கியதாக சீமானை முதல் குற்றவாளியாய் சேர்த்து அவர் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீஸ்.