மத்திய அமைச்சரவை திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் மாளிகை ஒரு முக்கிய செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'மத்திய கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேவால் சட்டத் துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும்,
இதுவரை சட்ட அமைச்சராக பணியாற்றி வந்த கிரண் ரிஜுஜு புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்” என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்ய கொலிஜியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொலிஜியம்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதில் பரிந்துரைகளை செய்கிறது.
கடந்த சில நாட்களாக, நீதிமன்ற நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக, நீதிபதிகள் நியமனத்திலும் மோதல் போக்கு வெடித்தது.
இந்த நிலையில், நீதிமன்ற விவகாரங்களில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து அவர் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.