தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் (FeTNA) காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ் என்பது நமக்கு மொழியாக அமுதமாக, உயிராக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் நம்மை வாழ்விக்கும் மண்ணாக, இனிமை தரும் மணமாக, இளமைக்கு மருந்தாக, போராட்டக் களத்துக்கு வாளாக உள்ளது. அதனால்தான் தமிழ் என்றால் நாம் உணர்ச்சி வசப்படுகிறோம்.
மொழியின் பெயரை தனது பெயராக வைத்துக் கொண்டது நமது தமிழ் இனம் மட்டுமே. உதாரணத்திற்கு தமிழ்ச் செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்று பெயர்வைத்துக் கொண்டவர்கள் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
இதை நான் சொல்லவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் கணக்கிட்டு ஆதாரத்துடன் சொல்லி உள்ளார். இதில் குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
அதனால்தான், "இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்" என்று சொன்னோம். இதற்காக, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் 6ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டுள்ளது. படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதை கீழடி அகழாய்வு நிலையே சாட்சி.
அதேப்போல், சிவகங்கையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமிநீங்கிய நெல்மணிகளின் காலம் என்பது பொதுஊழிக்கு முன்னர் 1155 என தெரிய வந்துள்ளது. மேலும், 'தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவியல் ஆய்வுகள் அடித்துச் சொல்கின்றன.
கீழடிக்கு அருகில் அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. இப்படி பல உதாணரங்களை சொல்ல முடியும்.
இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி காலத்தால் முந்தியது மயிலாடும்பாறைதான். இப்படி ஒவ்வொரு ஆய்வாக வர, வர தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக் கொண்டே உள்ளது.
முக்கியமாக சிந்துவெளியில் 'காளைகள்'தான் இருந்தன. இது திராவிடச் சின்னம். சிந்துவெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழரின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன’ என்றார்.