"ஒ.பி.எஸ். , டி.டி.வி தினகரன் இருவரும் அரசியல் அனாதைகள்" - கே.பி.முனுசாமி கடும் தாக்கு

மதுரை மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்த ஆலோசனைக் கூட்டம்
அதிமுக ஆலோசனைக் கூட்டம்
அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.கவினர் திரளாக பங்கேற்பதற்காக மாவட்ட வாரியாக மூத்த நிர்வாகிகள் சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.பியும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, மதுரை மாநாட்டிற்கு அதிக அளவு மக்களை அழைத்து வர வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பி முனுசாமி "ஒ.பன்னீர்செல்வமும், டி.டி.வி தினகரனும் அரசியலில் அனாதையாகி விட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கியபோது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது தான் குற்றச்சாட்டு வைத்தார். இன்று அதே சசிகலாவுடன் சேர்ந்து அரசியல் செய்ய நினைக்கிறார். இது அவருடைய கீழ்த்தரமான அரசியல் சிந்தனையை தான் காட்டுகிறது.

மதுரை மாநாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின், `தர்மயுத்தம்' நடத்திய ஓ.பன்னீ்ர்செல்வம் தற்போது டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொடநாடு பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்.

அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில் அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கொடநாடு வழக்கை கையில் எடுத்து எதிரிகளுடன் கூட்டணி சேர்ந்து அதுகுறித்து தற்போது பேசி வருகிறார்.

ஒ.பன்னீர்செல்வத்திற்கு நேற்று சசிகலாவும் தினகரனும் எதிரியாக இருந்தார்கள். இன்று அவர்கள் நண்பராகி விட்டார்கள். இதனால்தான், எடப்பாடி பழனிச்சாமி எதிரியாக மாறி விட்டார். நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவராக ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என்றார்.

- திருச்சி ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com